வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மற்றும் அவருடைய மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2020-11-29 05:01 GMT
சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 65). இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட மேட்டூர் சரகத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றினார். இவருடைய மனைவி சித்திராமணி (60). மோகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மோகன் ரூ.26 லட்சம் மதிப்புடைய சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக குவித்தது தெரியவந்தது. இதையடுத்து மோகன், அவருடைய மனைவி சித்திராமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்காக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மோகன், அவருடைய மனைவி சித்திராமணி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பு அளித்தார்.

மேலும் மோகனுடைய சொத்துகளான சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள 2,400 சதுர அடி நிலம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள 1,045 சதுர அடி நிலம், போடிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள 3,600 சதுர அடி நிலம் ஆகியவற்றையும், வங்கியில் உள்ள ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 90 மற்றும் அதற்கான வட்டியையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் இந்த சொத்துகள் அரசுடைமையாக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்