புதிய புயல் உருவாக வாய்ப்பு: ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-29 11:00 GMT
ராமேசுவரம்,

இலங்கைக்கு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கான சீதோஷ்ண நிலை ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 30-ந் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக மாறி தமிழக கடல் பகுதியை நோக்கி நகரவும், பாம்பன் அல்லது நாகப்பட்டினம், கடலூர் பகுதிகளில் கரையை கடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக ராமேசுவரத்தில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தங்கச்சிமடம் பாம்பனிலும் ஓரளவு மழை பெய்தது.

வங்கக் கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கன மழை மற்றும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாம்பனை சேர்ந்த மீனவர்கள் நிவர் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடலுக்கு செல்லாத நிலையில் மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அந்த மீனவர்கள் இன்று காலை கரை திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்