மழையால் சேதமடைந்த நெல் பயிர்களை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Update: 2020-11-29 11:30 GMT
காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 100 ஏக்கர் நெல் பயிர் முழுவதும் வயல்வெளியில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமாகின. விளைந்த நெல் பயிர்கள் மழைக்கு வயல்களில் சாய்ந்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். நெல் பயிர் சேதமடைந்த தகவல் அறிந்தவுடன் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வயல்களுக்கு சென்று சேதமடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.நிவாரணம் கிடைக்க மாவட்ட கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

விவசாய பயிர்கள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) , காரியாபட்டி தாசில்தார் தனகுமார் மற்றும் காரியாபட்டி வேளாண்மை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

அப்போது காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர் செயலாளர் செந்தில், அல்லாளப்பேரி ஊராட்சி தலைவர் பிரபாசிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்