பெங்களூருவில் வனவிலங்குகளின் உடல் உறுப்புகள் விற்பனை; பெண் உள்பட 4 பேர் கைது மான் தோல், 400 சிறுத்தை நகங்கள் பறிமுதல்

பெங்களூருவில் வனவிலங்குகளின் உடல் உறுப்புகளை விற்பனை செய்து வந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 சிறுத்தை நகங்கள், மான் தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-11-29 22:07 GMT
பெங்களூரு,

பெங்களூரு சி.கே.அச்சுக் கட்டு போலீசாருக்கு தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் உள்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஒரு பெண் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பைகளில் சிறுத்தை, புலி நகங்கள், கருப்பு நிற மானின் தோல், ஒரு குள்ளநரியின் தோல் மற்றும் தலை, 7 எறும்புதின்னி நகங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெயர்கள் கார்த்திக்(வயது 40), பிரசாந்த்(28), பிரமிளா(40), சாய்குமார்(22) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்து சிறுத்தை, புலி நகங்கள், யானை தந்தம் உள்ளிட்ட விலங்குகளின் உடல் உறுப்புகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும் சிறுத்தை, புலி நகங்களை இவர்கள் நகைக்கடையின் உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர். தற்போதும் சிறுத்தை, புலி நகங்களை விற்பனை செய்ய தான் 4 பேரும் வாடிக்கையாளர்களுக்காக காத்து நின்று உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 400 சிறுத்தை நகங்கள், 6 புலி நகங்கள், கருப்பு நிற மான் தோல், குள்ளநரி தோல் மற்றும் தலை, 7 எறும்புதின்னி நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 4 பேர் மீதும் சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்