கொரோனா தடுப்பு பணியின்போது மரணமடைந்த முன்களப்பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியின்போது மரணமடைந்த முன்களப்பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவித்தொகையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

Update: 2020-11-30 21:08 GMT
முன்களப்பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கியபோது எடுத்தபடம்
நலத்திட்ட உதவி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப்பணியாளராக பணியாற்றி வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மரணம் அடைந்த பாக்குவெட்டி கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் என்பவரது மனைவி கலையரசிக்கு நிவாரணத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும், 2 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 1 பயனாளிக்கு பட்டா உத்தரவு ஆணையும் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடை அமைக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.58,332 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருது
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் சிறப்பாக பணியாற்றியமைக்காக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த எமனேசுவரம் கிளை நூலகத்தில் பணிபுரியும் நூலகர் நாகேந்திரன் என்பவருக்கும், சிறந்த நூலக ஆர்வலர் விருது பாம்பன் கிளை நூலகம் வாசகர் வட்டத் தலைவர் முத்துவாப்பா என்பவருக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற நபர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் சிவசங்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்