தார் சாலையை சீரமைத்து தரக்கோரி ஆதார் கார்டை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள்

தார் சாலையை சீரமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு ஆதார் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் வந்தனர். இது தொடர்பாக 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-01 05:17 GMT
சேலம்,

ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டி கோலுக்காரனூர் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் மெயின் ரோட்டில் இருந்து கோலுக்காரனூர் வரை செல்லும் சாலையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையை பயன்படுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும், குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தார் சாலை அமைத்து தரக்கோரி ஏற்கனவே மாவட்ட கலெக்டர், மேட்டூர் உதவி கலெக்டர், ஓமலூர் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆதார் கார்டு ஒப்படைக்க...

இந்த நிலையில், பச்சனம்பட்டி கோலுக்காரனூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை த.மா.கா. மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவர் சின்னப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்கள் எங்கள் பகுதியில் தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளதாகவும், இதனால் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மனு கொடுக்க வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

126 பேர் கைது

இதையடுத்து அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றதால் த.மா.கா. நிர்வாகி சின்னப்பன் உள்பட 126 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில், 49 பெண்கள் அடங்குவர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்