சாணார்பட்டி அருகே பரபரப்பு: செங்கல் சூளை அதிபர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

சாணார்பட்டி அருகே செங்கல் சூளை அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-12-01 20:30 GMT
மோப்ப நாய் மேக்ஸ் மூலம் போலீசார் சோதனை நடத்திய காட்சி; மோட்டார் சைக்கிளில் தொங்கி கொண்டிருந்த வெடிகுண்டு
பயங்கர வெடி சத்தம்
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை அடுத்த எல்லப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர், அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், முருகேசன், அவருடைய மனைவி அனிதா (36), மகன் ஞானசக்திவேல் (14), மகள் சண்முகப்பிரியா (18), மாமனார் ராமராஜ் (60), மாமியார் சுப்புத்தாய் (58) மற்றும் உறவினர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அவருடைய வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதில் வீடு அதிர்ந்ததை கண்டு தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் அலறியடித்து எழுந்தனர். சற்று நேரத்தில் வீட்டுக்குள் கரும் புகை பரவியது. இதனால் வீட்டிற்குள் இருந்த அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். புகை முடிந்ததும், முருகேசன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாட்டு வெடிகுண்டு
இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, முருகேசன் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கீழ்பகுதியில் பெரிய திரியுடன் கூடிய நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அதனை போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிக்குண்டுகளை முருகேசன் வீட்டில் வீசி சென்றது தெரியவந்தது.

முன்விரோதம் காரணமா?
இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் மேக்ஸ் வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசில் முருகேசன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. செங்கல் சூளை அதிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் சாணார்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்