மனைவி-மகளை அடித்துக்கொன்ற ஜவுளி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

மனைவி, மகளை அடித்துக்கொன்ற ஜவுளி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2020-12-01 22:00 GMT
தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 42). ஜவுளி வியாபாரியான இவருக்கும், நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த கோகிலா (26) என்பவருக்கும் கடந்த 19.8.2010 அன்று திருமணம் நடந்தது.

பின்னர் இவர்கள் தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு புவனா (3) என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் சங்கர் தனது மனைவி கோகிலா நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி, தகராறு செய்து வந்தார். கடந்த 29.5.2014 அன்று மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் கோகிலாவை அடித்து கொலை செய்தார். இதனை பார்த்து கதறி அழுத மகள் புவனாவை காலை பிடித்து தூக்கி சுவரில் அடித்தார். இதில் புவனா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்ததால் சங்கர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த புவனாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புவனாவும் பரிதாபமாக இறந்தாள்.

இதுதொடர்பாக சங்கர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பாண்டியராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் மனைவி மற்றும் மகளை கொலை செய்த குற்றத்துக்காக சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்