ஸ்ரீவைகுண்டம் அருகே கோர விபத்து: தாய்-2 வயது மகள் பலி - கார், மினி லாரி-மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து மோதின

ஸ்ரீவைகுண்டம் அருகே கார், மினிலாரி-மோட்டார் சைக்கிள் ஆகியவை அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் தாயும்-2 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-12-01 22:00 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி திருவரமங்கை (வயது 28). இவருக்கு நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேற்று குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர்.

காரில் திருவரமங்கை, அவரது கணவர் வெங்கடேஷ், மகள் தாமிரபரணி, (2) மாமனார் ஆதிநாதன் (58), மாமியார் சீதைஜானகி (50) ஆகியோர் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காரும், எதிரே வந்த மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் காரின் பின்னால் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காரில் இருந்த தாமிரபரணி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், காரில் வந்த ஆதிநாதன், சீதைஜானகி, வெங்கடேஷ், திருவரமங்கை மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஏரலை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். மினிலாரி டிரைவரான நாசரேத்தை சேர்ந்த வேல்மயில் லைசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயங்களுடன் சாலையில் கிடந்த 5 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருவரமங்கை சிகிச்சை பலனின்றி நேற்று இரவில் உயிரிழந்தார்.

இந்த விபத்தால் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்