காரிமங்கலம் அருகே வாகனத்தை போலீசார் தடுத்ததால் பா.ம.க.வினர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

சென்னைக்கு சென்ற வாகனத்தை போலீசார் தடுத்ததால் காரிமங்கலம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-12-01 21:59 GMT
காரிமங்கலம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
தடுத்து நிறுத்தம்
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் அரசு பணியாளர் தேர்வாணையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்க மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்னை நோக்கி நேற்று சென்றனர்.

காரிமங்கலம் பைபாஸ் சாலையில் அகரம் பிரிவு ரோடு அருகே பா.ம.க.வினர் சென்ற வாகனங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என கூறினர். இதனால் பா.ம.க. நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல்
இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சென்னைக்கு செல்ல அனுமதி அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கை விடுவோம் என பா.ம.க.வினர் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் சென்னை செல்ல அனுமதி வழங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்