தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,057 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,057 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.

Update: 2020-12-01 22:08 GMT
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கார்த்திகா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் தணிகாசலம், பிரதாப், திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,057 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5,875 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 132 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 50 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

கடும் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 1,000 கொரோனா பரிசோதனைகள் ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,40,319 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 50 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 8,360 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் 4,30,773 பேர் பயனடைந்துள்ளனர்.

ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க போலீசார், வருவாய் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்