பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு: சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்குவது 100 சதவீதம் உறுதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பையும் மீறி சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்குவது 100 சதவீதம் உறுதி என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2020-12-01 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்பும் பொருட்டு மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அவர் டெல்லி சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார். கட்சி மேலிடத்தின் அனுமதிக்காக எடியூரப்பா காத்திருக்கிறார். வருகிற 7-ந் தேதி கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேல்-சபை உறுப்பினர்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி. இவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். பா.ஜனதா தலைவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இவர்களை தவிர, மந்திரி பதவியை பெற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். ரேணுகாச்சார்யா உள்பட கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவியை பெற்றுத்தர நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-மந்திரி எடியூரப்பா, “மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்குவது 100 சதவீதம் உறுதி“ என்றார். இதன் மூலம் முதல்-மந்திரியே கூறிவிட்டதால் மந்திரிசபையில் சி.பி.யோகேஷ்வருக்கு இடம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவருக்கு எக்காரணம் கொண்டும் மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ரேணுகாச்சார்யா உள்பட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களின் எதிர்ப்பையும் மீறி எடியூரப்பா, சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்