மணப்பாறையில் மண் அள்ள அனுமதி கேட்டு லாரி, டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்கள் மறியல் போராட்டம்

மணப்பாறையில் மண் அள்ள அனுமதி கேட்டு லாரி, டிராக்டர் உரிமையாளர்கள், டிரைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-12-02 01:28 GMT
மணப்பாறை,

தமிழக அரசு மணல் விற்பனைக்கு தடை விதித்த நிலையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் தவிர சவுடு மண் மற்றும் கிராவல் போன்றவற்றை கட்டுமான பணிகளுக்காக கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

கொரோனா காலகட்டத்தில் போதிய வருமானம் இன்றி தங்கள் வாகனங்களுக்கு வரி, காப்பீடு, எப்.சி. போன்றவற்றை செய்ய முடியாத நிலையில், மணல் தவிர மற்ற மண்ணை அள்ளிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பொக்லைன், லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மணப்பாறை தாசில்தாரிடம் மனு அளித்தனர். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தர்ணா-மறியல்

இதனால் பொக்லைன், டிப்பர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மணப்பாறை தாசில்தார்அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மணப்பாறை ரவுண்டனா அருகேயும், கோவில்பட்டி சாலை காமராஜர் சிலை அருகேயும், திருச்சி சாலையிலும் பொக்லைன், டிராக்டர் மற்றும் லாரிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

அப்போது, மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறினர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பின்னர், இந்த பிரச்சினைக்கு தாசில்தார் அலுவலகத்தில் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். தாசில்தார் லெஜபதிராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று மணப்பாறையில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்