எதிர்ப்புசக்தி குறைவானவர்களை கொரோனா தாக்குகிறது - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கொரோனா அதிகமாக தாக்குகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.

Update: 2020-12-02 14:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட எஸ்ட்ஸ் கட்டுப்பாடு அலகின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மீரா தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், உதவி கலெக்டர் (பயிற்சி) அமீத்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் கவிதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயம் வழங்கினார். மேலும் சிறப்பாக களப்பணியாற்றிய அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஏ.ஆர்.டி. ரத்த வங்கி, தொண்டு நிறுவனங்கள், சேவை மையங்கள், ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயம் வழங்கினார்.

தொடர்ந்து அவரது முன்னிலையில் எய்ட்ஸ் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மைய கருத்து உலகளாவிய ஒற்றுமை, பொறுப்பை பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். இந்நோய் ஒழிப்பதற்கு பாதித்தவர்களின் பொறுப்பு மட்டும் அல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,71,437 பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொண்டதில் 234 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. நோயின் பாதிப்பை பூஜ்ஜியம் சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு மிக அவசியம். இதற்கான தடுப்பூசி இன்று வரை இல்லை. தற்போது இந்நோய் பாதிப்பு உள்ளவர்களை கொரோனா தொற்று அதிகமாக தாக்குகிறது. இதற்கு காரணம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தமிழக அரசு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்