சிறுகுடல் கிராமத்தில் போலி உரம் விற்பனை: இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

சிறுகுடல் கிராமத்தில் போலி உரம் விற்பனை செய்தவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-12-03 00:07 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒரு மனு கொடுத்தனர். அதில், தங்களது விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தோம். அப்போது 80 விவசாயிகள் பாட்டம்பாஸ் என்ற உரத்தை அதே பகுதியை சேர்ந்தவர் உள்பட 3 பேரிடம் ஒரு மூட்டை ரூ.970 என்ற விலைக்கு வாங்கி சோளப்பயிருக்கு அடி உரமாக தெளித்தோம். ஆனால் மக்காச்சோள பயிர் 3 அடிக்கு மேல் வளரவில்லை. பயிர் வளராததற்கு காரணம் விற்பனை செய்யப்பட்ட உரம் போலியானது என்பது தெரியவந்தது.

அதற்கு அந்த உர விற்பனையாளர்கள் இழப்பீடு தொகை தருவதாக கூறியும், அதனை வழங்கவில்லை. போலியான உரத்தை விற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து எங்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று கடந்த மாதம் 11-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே ஒரு மனு கொடுத்திருந்தோம்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்...

அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்துள்ளனர். ஆனால் எங்களுக்கு இழப்பீடு தொகை இதுநாள் வரை பெற்று தரவில்லை.

எனவே கலெக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், போலி உரம் விற்பனை செய்து மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பெரம்பலூருக்கு தமிழக முதல்-அமைச்சர் வருகையின் போது கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்