திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனின் அக்காள் மகன் உள்பட 4 பேர் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனின் அக்காள் மகன் சுரேஷ் உள்பட 4 பேர் கோர்ட்டில் ஆஜராகினர்.

Update: 2020-12-03 02:23 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை வழக்கில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், அவரது அக்காள் மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

விசாரணைக்கு பிறகு, முருகன் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் கடந்த மாதம் 27-ந் தேதி பெங்களூரு சிறையில் இறந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எண் 1-ல் முருகனை தவிர, கனகவல்லி, அவரது மகன் சுரேஷ், உறவினர் மணிகண்டன் மற்றும் மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோருக்கு 125 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

4 பேர் கோர்ட்டில் ஆஜர்

குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின், முதல் முறையாக இந்த வழக்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ், கணேசன் ஆகியோரையும், ஏற்கனவே வழக்கில் ஜாமீன் பெற்று திருவாரூரில் இருந்த கனகவல்லி, மணிகண்டன் உள்ளிட்டோரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் 4 பேரிடமும் லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர்கள், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தனர்.

இறப்பு சான்றிதழ்

இதையடுத்து பெங்களூரு சிறையில் இறந்த முருகனின் இறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதி ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு கார்த்திக் ஆசாத் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்