இறால் பண்ணைக்கு சென்றபோது வெள்ளப்பெருக்கு: தென்னை மரத்தை பிடித்து உயிருக்கு போராடிய 3 பேர் மீட்பு

இறால் பண்ணைக்கு சென்றபோது வெள்ளப்பெருக்கில் சிக்கியதால் தென்னை மரத்தை பிடித்து உயிருக்கு போராடிய 3 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2020-12-06 05:51 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள காயல்பட்டு கிராமத்தில் இறால் பண்ணை உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தண்ணீர், காயல்பட்டில் உள்ள இறால் பண்ணையை நேற்று சூழ்ந்தது. இதை பார்த்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 50), பாஸ்கர்(50), இளமாறன்(24) ஆகிய 3 பேரும் காலை 7 மணி அளவில் இறால் பண்ணையில் இருந்த சில பொருட்களை எடுத்து வர சென்றனர். அந்த சமயத்தில் இறால் பண்ணையை சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகளவு தண்ணீர் வந்ததால் 3 பேரையும் வெள்ளம் அடித்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட 3 பேரும், அங்கிருந்த தென்னை மரத்தை பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.

படகு மூலம் மீட்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி கடலூர் தாசில்தார் பலராமன், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா, சமூக பாதுகாப்பு பிரிவு தாசில்தார் செல்வக்குமார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து அய்யம்பேட்டையில் இருந்து மீன்பிடி படகு வரவழைக்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் உதவியுடன், தென்னை மரத்தை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்சில் 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் செய்திகள்