தமிழகம்-புதுவை எல்லை பிரச்சினையால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் அரசு பள்ளி மாணவர் தவிப்பு

‘நீட்’ தேர்வில் 500 மதிப்பெண் எடுத்தும், தமிழகம்-புதுவை எல்லை பிரச்சினையால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் அரசு பள்ளி மாணவன் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளார்.

Update: 2020-12-10 01:23 GMT
திருக்கனூர்,

புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன், திருக்கனூர் அருகே உள்ள தமிழக எல்லையான புராணசிங்குபாளையம் கிராமத்தின் ஒரு பகுதி புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் மற்ற பகுதி தமிழகத்தின் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டும் இடம் பெற்றுள்ளன.

தமிழக பகுதியில் வரும் புராணசிங்குபாளையத்தில் விவசாய கூலி தொழிலாளர்களான ரகுபதி-அமுதா தம்பதியின் மகன் மணிகண்டன், எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை புராணசிங்குபாளையத்தில் உள்ள புதுவை அரசு தொடக்கப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அதே ஊரில் உள்ள புதுவை அரசு பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.

இடம் கிடைக்காமல் தவிப்பு

இந்தநிலையில் மருத்துவ படிப்பில் சேர விரும்பி மணிகண்டன் எந்த பயிற்சி வகுப்பிலும் சேராமல் படித்து கடந்த 2019-ல் நீட் தேர்வு எழுதினார். அப்போது 170 மதிப்பெண்கள் எடுத்தார். தொடர்ந்து படித்து, 2020-ல் 500 மதிப்பெண் பெற்றார்.

இவர் தமிழகப் பகுதிக்குள் வருபவர் என்பதால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக் கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்காக தமிழகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் புதுவை அரசு பள்ளிகளில் படித்ததாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் பிற மாநில மாணவர்கள் 5 ஆண்டுகள் அரசு பள்ளியில் தொடர்ந்து படித்தால் குடியுரிமை பெற்று பொதுப் பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதி உள்ளது. அதே விதிமுறை புதுவை அரசில் இருந்தாலும் மாணவர் மணிகண்டனிடம் தமிழக குடியுரிமை சான்றிதழ் உள்ளதால் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை (சென்டாக்) மூலம் விண்ணப்பிக்க புதுவை அரசில் விதிமுறை இல்லை. எனவே மாணவர் மணிகண்டன் புதுவை அரசின் மூலம் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். சேர்க்கைக்காக சென்டாக்கிலும் விண்ணப்பிக்க இயலவில்லை. மேலும் புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக் கான உள்ஒதுக்கீடு இதுவரை அமலுக்கும் வரவில்லை.

எட்டாக்கனியானது

இதுகுறித்து மணிகண்டனின் வகுப்பு ஆசிரியரான ஸ்ரீராம் கூறியதாவது:-

குடிசை வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மகனான மணிகண்டன் நீட் தேர்வில் 500 மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பு அவருக்கு எட்டாக்கனியாகி விட்டது. இதற்கு தடையாக உள்ள எல்லை பிரச்சினை குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள்ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டு வரும் சூழலில், இந்த மாணவரின் நிலையை கருத்தில் கொண்டு குடியுரிமை விதிகளில் சிறப்பு திருத்தம் செய்து குடியுரிமை வழங்கி சென்டாக் மூலம் மருத்துவ விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள புதுவை அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழக குடியுரிமை பெற்றுள்ள இந்த மாணவர் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க தமிழக அரசு வாய்ப்பளிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கே உதவ வேண்டும் என்ற கொள்கையுடைய இரு மாநில அரசுகளும் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்