கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள், கட்சி அலுவலகத்திற்கு ‘சீல்’

உப்பிலியபுரத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த கடைகள், கட்சி அலுவலகத்திற்கு ‘சீல்’.

Update: 2020-12-10 01:31 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுப்புற பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து அதில் அசைவ உணவுகள் சமைப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சோபனபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோவன் மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 7 பேருக்கு சம்மன் அனுப்பியதோடு, 4 கடைகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, நேற்று திருச்சி மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையிலும், துறையூர் அறநிலையத்துறை ஆய்வாளர் ராணிதேவி, கொப்பம்பட்டி அறநிலையத்துறை செயல் அலுவலர் நித்யா, வருவாய் ஆய்வாளர் சரவணன், சோபனபுரம் ஊராட்சி நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அ.தி.மு.க. சோபனபுரம் கிளை அலுவலகம், தி.மு.க. கிளை அலுவலகம், சே.நடராசன் என்கிற சேனா தம்பு என்பவரது அசைவ உணவகம், மோகன் என்பவரது மளிகை கடை ஆகிய 4 இடங்களை காலி செய்து ‘சீல்‘ வைத்தனர். அப்போது முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்