கலெக்டர் அலுவலக சுவரில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு

சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-10 04:19 GMT
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சுனிதா (வயது 29), சுகன்யா (26) என்ற 2 மகள்களும், சுபாஸ் ஆனந்த் (22) என்ற மகனும் இருந்தனர். சுபாஸ் ஆனந்த் நாகர்கோவிலில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலைக்கு சென்ற சுபாஸ் ஆனந்த் மாயமானார். பின்னர் 2 நாட்கள் கழித்து, அழுகிய நிலையில் மருந்துவாழ்மலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் வசந்தி தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், ராதாபுரத்தை சேர்ந்த தம்பதியினருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, பிரேத பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார்.

இளம்பெண் தற்கொலை மிரட்டல்

இந்தநிலையில் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வசந்தி, அவரது மூத்த மகள் சுனிதாவுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதனை கண்ட போலீசார், அவர்களை பிடித்து அப்புறப்படுத்தினர்.

அப்போது சுனிதா, “எனது தம்பி சாவிற்கு நியாயம் கிடைக்காது. இதனால் நான் இறப்பதைவிட வேறு வழி தெரியவில்லை என கூறியபடி கலெக்டர் அலுவலகத்தில் அங்குமிங்கும் ஓடினார். பின்னர் கலெக்டர் அலுவலக காம்பவுண்டு சுவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கிருந்த போலீசார், சுனிதாவை மீட்டு சமதானப்படுத்தினர்.

இதனைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் இருவரும் மனு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்