குமரி-கேரள எல்லையில் 2 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை; கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் சிக்கியது

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உள்ள 2 சோதனைச்சாவடிகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் சிக்கியது.

Update: 2020-12-12 21:32 GMT
சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.
சோதனைச்சாவடிகளில் லஞ்சம்
தமிழகம் முழுவதும் மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், சரக்கு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் மற்றும் போலீசார் எடுத்து கொள்வதாகவும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதேபோல் குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. குமரி- கேரள எல்லைப்பகுதியில் களியக்காவிளை உள்ளது. குமரியில் இருந்து வாகனங்களும், கேரளாவில் இருந்து வாகனங்களும் களியக்காவிளையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் போலீசாரின் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியில் கேரளாவிற்கு செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து வரக்கூடிய வாகனங்களை சோதனை செய்ய மற்றும் ரேஷன் அரிசி, மணல் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை தடுப்பதற்காக 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடி சோதனை
அதேபோல் களியக்காவிளையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியும் செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவிற்கு செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் அங்கிருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனை சாவடியில் உரிய ஆவணங்களை காண்பித்து சரிபார்த்த பிறகே அனுமதி பெற்று செல்ல முடியும். இதனால் இங்கு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் படந்தாலுமூட்டில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.20 ஆயிரத்து 700 பணம் அங்கு இருந்தது. இதனையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு களியக்காவிளை வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ.) சோதனைச்சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கும் கணக்கில் வராத பணம் ரூ.64 ஆயிரத்து 140 சிக்கியது.

வழக்கு
இதையடுத்து படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த பேச்சிப்பாறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் 2 போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதே போல போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் பணம் எப்படி வந்தது? அதற்குரிய ஆவணங்கள் இருக்கிறதா? முறைகேடாக வந்த பணமா? என லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. சோதனைச்சாவடிகளில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.84 ஆயிரத்து 840 சிக்கியது களியக்காவிளையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்