தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 136 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 136 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2020-12-13 02:17 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்(லே£க்அதாலத்) நேற்று நடந்தது. தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு மாவட்ட நீதிபதியும், மக்கள் நீதிமன்ற தலைவருமான(பொறுப்பு) தங்கவேல், கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்ரீவர்தன், முதன்மை சார்பு நீதிபதி(பொறுப்பு) சரவணக்குமார், கூடுதல் சார்பு நீதிபதி அண்ணாமலை, நீதித்துறை நடுவர்கள் மோசஸ் ஜெபசஸ்டின், அல்லி, முகமதுஅலி ஆகியோர் பங்கேற்று நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணை செய்தனர்.

இதில் வக்கீல்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு செயலாளர் நீதிபதி சுதா செய்து இருந்தார். இதேபோல் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

136 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சை மாவட்டத்தில் 12 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்து வழக்குகளில் சுமார் 452 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இவற்றில் 136 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் விபத்து இழப்பீடு வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.3 கோடியே 77 லட்சத்து 41 ஆயிரத்து 544-யை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்