கிரிக்கெட் பந்து தாக்கி புதுமாப்பிள்ளை பரிதாப சாவு

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் தாக்கியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-13 20:09 GMT
கிரிக்கெட் பந்து தாக்கியது
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் லோகநாதன் (வயது 24). இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். லோகநாதன் திருவள்ளூர் வள்ளுவர்புரத்தை சேர்ந்த ராசாத்தி (20) என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் புதுமாப்பிள்ளையான அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்த லோகநாதன் தனது நண்பர்களுடன் திருவள்ளூரை அடுத்த ஒதிக்காடு எம்.ஜி.ஆர்.நகர் விளையாட்டு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றார்.

அப்போது மைதானத்தில் நின்று கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் அடித்து மேலே வந்த பந்து லோகநாதனின் நெஞ்சில் தாக்கியது. இதில் அவர் மயங்கி மைதானத்தில் விழுந்தார். இதை கண்டு உடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக இறந்து போனார்.

சாலை மறியல்
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த புன்னப்பாக்கத்தை சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து தாமோதரன் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்