மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-16 23:40 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பால்ராஜ்(வயது 25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி காலை காட்டுப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 26 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தூக்கிச்சென்று, பருத்தி காட்டுக்குள் வைத்து கற்பழித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் வாதாடினார்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி கிரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்ததற்கு பால்ராஜுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பால்ராஜை அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தண்டனை விதிக்கப்பட்ட பால்ராஜுக்கு, மற்றொரு பெண்ணுடன் திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்