கறம்பக்குடி அருகே சேறும்-சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

கறம்பக்குடி அருகே ேசறும்-சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-18 00:30 GMT
கறம்பக்குடி, 

கறம்பக்குடி ஒன்றியம், பல்லவராயன் பத்தை ஊராட்சியில் ஆத்தியடிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கீழ வாண்டான்விடுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது.

இதனால், மழை காலங்களில் இந்த சாலை சேறும்-சகதியுமாக வயல்வெளி போல் மாறி விடுகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள முதியோர்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாற்று நடும் போராட்டம்

இந்தநிலையில் தற்போது கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆத்தியடிபட்டி சாலை சேறும்-சகதியுமாக நடந்து செல்லவே முடியாத நிலையில் உள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இந்த சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் போராட்டம் நடத்திய பெண்கள் இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்