மதுரையில் மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தற்கொலை; லஞ்ச வழக்கில் சிறை தண்டனை பெற்ற 3-வது நாளில் பயங்கரம்

லஞ்ச வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற 3-வது நாளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர், தனது மனைவியை ெகாடூரமாக கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் மதுரையில் நடந்தது.

Update: 2020-12-18 00:52 GMT
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன்- அவரது மனைவி ஆசிரியை உமா மீனாட்சி
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்
மதுரை செல்லூர் களத்துப்பொட்டல் நேரு தெருவை சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன் (வயது 50). மதுரை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கில் இருந்து அரசு டாக்டரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

3 ஆண்டு சிறை
இந்த வழக்கில் கடந்த 14-ந் தேதி, மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு பெருமாள் பாண்டியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பெருமாள்பாண்டியனின் சொந்த ஊர் தேனி மாவட்டம் வடுகப்பட்டி. இவரது மனைவி உமாமீனாட்சி(46), இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியை. இவர்களின் மூத்த மகன் சுந்தர சுகீர்தன்(22). பி.எஸ்சி. யோகா படித்துவிட்டு தற்போது கம்ப்யூட்டர் கல்வி பயின்று வருகிறார். இளைய மகன் பிரனவ் கவுதம்(14). 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது வடுகப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.

மனைவியை கொன்று தற்கொலை
நேற்று காலை சுந்தரசுகீர்தன் வழக்கம் போல் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று விட்டார். மதியம் அவர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டியிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. செல்போனில் பெற்றோரை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் எடுத்து பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெருமாள்பாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி உமாமீனாட்சி உளியால் தலையில் வெட்டப்பட்டும், கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டும் பிணமாக கிடந்தனர். இந்த பயங்கர காட்சியை கண்டு சுந்தரசுகீர்தன் கதறி அழுதார்.

காரணம் என்ன?
உடனடியாக இதுகுறித்து செல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பெருமாள்பாண்டியனுக்கு கோர்ட்டு தண்டனை வழங்கியதில் இருந்து வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தார். இதற்கிடையில் நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பெருமாள் பாண்டியன், மனைவியை தாக்கி உளியால் தலையில் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு
மனைவியை கொலை செய்து விட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்