ஜனவரி 15-ந் தேதிக்கு பின்பு 7,200 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் வருகிற ஜனவரி 15-ந் தேதிக்கு பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்' வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2020-12-19 12:42 GMT
திருச்சி,

திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 496 நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 496 பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்களிடம் தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வறுமை காரணமாக ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. அவரது வழியில் ஆட்சி நடத்தி ஜெயலலிதா, ஏழைகள் பொருளாதார ரீதியாக உயர வேண்டுமென்றால் கல்வி முக்கியம் என உணர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.

மாணவர்களுக்கு உணவு மட்டுமல்லாது மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு-புத்தகம், புத்தகப்பை, கணித உபகரணங்கள், காலணி என 14 வகையான பொருட்களை அளித்தார். தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி இந்திய நாடே வியந்து பார்க்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய திட்டங்களை மேலும் மேம்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆணையை வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், ஆண்டுக்கு 405 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வில் 152 மதிப்பெண்கள் எடுத்த மாணவருக்கும் மருத்துவ கல்வி கிடைத்துள்ளது.

அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இரு கண்களாக நினைத்து அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கட்டாயக்கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மே மாதம் வழங்க வேண்டிய ரூ.375 கோடியை முன்னதாகவே வழங்கி துயர் துடைத்துள்ளோம்.

நர்சரி, தொடக்கப் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை 3 ஆண்டு வழங்குவதை 5 ஆண்டாக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்து, வாய்ப்பிருந்தால் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும். மேலும் கட்டிட அனுமதிக்கும் அங்கீகாரம் வேண்டும் என சங்க தலைவர் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதை அரசு பரிசீலித்து நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் தயாராக உள்ளது. சமச்சீர்கல்வித் திட்டத்தால் பின்தங்கிய நிலை இருந்ததால், பிற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக கல்வி பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இப்போது, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கும் தமிழக பாடத்திட்டத்தில் இருந்துதான் 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசின் பிளஸ்-1, பிளஸ்-2 புத்தகங்கள்தான் அடிப்படைத்தேவையாக உள்ளன. தகவல் தொழில்நுட்ப மேலாண்மை மேம்படுத்த நவீன கணினி ஆய்வகம் அமைக்க அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்கப்படுகிறது.

வருகிற ஜனவரி 15-ந் தேதிக்குள் 7,200 அரசுப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட் வகுப்புகள்' தொடங்கப்படும். கரும்பலகைகள் இல்லாமல் செய்திட 80 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் பலகைகள்' ஏற்படுத்தப்படும். 7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்படும். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். கல்வியில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

மேலும் செய்திகள்