ஆரணி அருகே அடக்கம் ெசய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-20 06:12 GMT
ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் பிணத்துடன் மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
ஆக்கிரமிப்பு
ஆரணி கொசப்பாளையம் களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 34). இவர் சென்னையில் கன்டெய்னர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியான அவரது உடல் சொந்த ஊரான ஆரணி களத்து மேட்டு தெருவிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆரணி - வடுகசாத்து சாலையில் உள்ள திருமணமாகாதவர்களுக்கு புதைக்கப்படும் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் சுமார் ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை தற்போது சோமு, சங்கர் ஆகியோர் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இறுதிச்சடங்கு செய்துவிட்டு நேற்று மாலை சுந்தரமூர்த்தி உடலை கொண்டு செல்லும் போது அதற்கு சோமு, சங்கர் ஆகியோர் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இவ்வழியாக செல்லக்கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார,் ஆரணி வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக பிணத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக நாளை (இன்று) ஆரணி தாலுகா அலுவலகத்தில் சமரசக் கூட்டம் நடத்தி அந்த இடத்தை அளந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பரபரப்பானது.

மேலும் செய்திகள்