பழையனூர் கிராமத்தில் ரேஷன்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார்

பழையனூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-12-21 03:45 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வாணாபுரத்தை அடுத்த பழையனூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி சமைத்து சாப்பிட முடியாத அளவுக்கு தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பருப்பு, கல், மண் மற்றும் குப்பைகள் அதிகளவில் கலந்து வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்ததாகவும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ரேஷன்கடைக்காரரிடம் கேட்டால் அவர் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை. மேலும் 25 கிலோ அரிசிக்கு ரசீது போடுகிறார். ஆனால் அரிசி 19 கிலோதான் இருக்கிறது. அரிசி ஏன் குறைவாக இருக்கிறது என்று கேட்டால் அதற்கு தரக்குறைவாக பேசுகிறார். இதுபற்றி நாங்கள் உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து ரேஷன்கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அரிசி எங்கள் விவசாய நிலத்தில் இருந்து நாங்கள் தரவில்லை. இதுபோன்ற அரிசிதான் எங்களுக்கு வருகிறது. அதைத்தான் நாங்கள் தருகிறோம். நீங்கள் வேண்டுமானாலும் உயர் அதிகாரிகளிடம் கேளுங்கள் என்றார்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தரமான அரிசியை வழங்குவது மட்டுமல்லாமல், சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்