காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு; கடலில் குதித்து 9 மீனவர்கள் உயிர் தப்பினர்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதில் இருந்த 9 மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

Update: 2020-12-21 22:42 GMT
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுதீப்பிடித்து எரிந்தபோது எடுத்த படம்.
விசைப்படகில் தீ
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை காசிமேடு இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பரிமளா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல இருந்தனர்.

ஆழ் கடலில் சென்று மீன் பிடித்து வருவதால் அதற்கு தேவையான 6,500 லிட்டர் டீசல் மற்றும் உணவு பொருட் கள், ஐஸ், மீன்பிடி சாதனங் களை ஏற்றிக்கொண்டு காலை 6 மணி அளவில் கடலுக்குள் செல்ல விசைப்படகின் மோட்டாரை இயக்கினர்.

அப்போது என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகில் வைத்து இருந்த டீசல் டேங்க், வலை உள்ளிட்ட பொருட்களில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

கடலில் குதித்து தப்பினர்
இதனை பார்த்த மீனவர்கள், படகில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீமளமளவென்று படகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் விண்ணை நோக்கி எழுந்தது.

படகில் இருந்த மீனவர்கள் 9 பேரும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்து கரை ஏறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி விசைப் படகில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் விசைப்படகு முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது.

ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்
தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு சில நாட்களாக கரையில் நிறுத்தப்பட்டு பழுது பார்த்து வந்ததும், நேற்று மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றபோது தீப்பிடித்து எரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்