திருப்பூரில் 2 இடங்களில் அழகிகளை வைத்து விபசாரம்; 6 பேர் கைது

திருப்பூரில் 2 இடங்களில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-24 22:15 GMT
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டில் விபசாரம்
திருப்பூர் மண்ணரை அறிவொளி நகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அழகியை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை அந்த வீட்டுக்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

கேரள அழகி மீட்பு
இதைத்தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த சையது அலி (வயது 40) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அவர் தனது வீட்டை மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஆன்லைனில் விளம்பரம் செய்து வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

பின்னர் அந்த வீட்டில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 27 வயது அழகியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் சையது அலியை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

வீரபாண்டி
இதுபோல் திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட ஜே.ஜே.நகரில் இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக ஜே.ஜே.நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஜே.ஜே.நகர் 2-வது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் திருவாரூரைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 29) என்பவர் 2 இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் அதே வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பால்சாமி (45), சிவப்பிரகாஷ் (27), லோகநாதன் (36) மற்றும் ராஜா (33) உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த ஒரு மாத காலமாக செல்போன் மூலமாக பலருடன் தொடர்பு கொண்டு விபசாரத்திற்கு அழைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட 2 பெண்களையும் போலீசார் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்