புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு கிரண்பெடியே காரணம்; பிரதமருக்கு, நாராயணசாமி பதில்

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு கிரண்பெடியே காரணம் என்று பிரதமருக்கு நாராயணசாமி பதில் தெரிவித்தார்.

Update: 2020-12-26 20:26 GMT
முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு செயலாளர் பாலசுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், புதிய நீதி கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதா சஞ்சீவி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கிரண்பெடி காரணம்
கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தே்ாதல் பற்றி பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆளுகிறது. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வில்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருடன், நான் விவாதிக்க தயாராக உள்ளேன். தேர்தல் காலதாமதத்திற்கு கவர்னர் கிரண்பெடி தான் காரணம். இதனை ஆதாரத்துடன் நிரூபிப்பேன். இதுதொடர்பாக என்னுடன் விவாதிக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா? ஜனநாயகத்தை பற்றி பேச பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான விதிமுறைப்படி நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும். பிரதமர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்