முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் உடல் அடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அஞ்சலி

உடல்நலக்குறைவால் இறந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-12-28 04:05 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் (வயது 91). இவர் உடல் நலக்குறைவால் தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான கடம்பூர் வடக்கு ரத வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று அதிகாலையில் இருந்தே கடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

அண்ணா விருதுக்கு பரிந்துரை

தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையாக, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் விசுவாசியாக வாழ்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். அவர், திராவிட பாரம்பரியத்தின் மூத்த தலைவராக திகழ்ந்தவர்.

தமிழக அரசின் சார்பில் கடம்பூர் ஜனார்த்தனனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது திடீர் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அ.தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய இழப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சலி செலுத்தியவர்கள்

கடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, செங்கான், காந்தி காமாட்சி, பால்ராஜ், ஞான குருசாமி, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட ெஜயலலிதா பேரவை இணை செயலாளர்கள் நீலகண்டன், குடியரசு பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,

கடம்பூர் நகர செயலாளர் முத்து, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சுப்புராஜ், மகேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் காமராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மகளிரணி செல்லத்தாய், மாவட்ட பிரதிநிதி வருமூர்த்தி உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் எம்.பி.க்கள்

முன்னாள் எம்.பி.க்கள் அப்பாத்துரை, சிவப்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி,

கடம்பூர் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாகராஜா, தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்கா மீட்பு குழு தலைவர் முருகன், கடம்பூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெயராஜ், பொதுச்செயலாளர் காளிராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உடல் அடக்கம்

தொடர்ந்து மதியம் கடம்பூர் ஜனார்த்தனனின் உடலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி, இறுதி ஊர்வலமாக எடுத்து சென்று, கடம்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மனைவியின் கல்லறை அருகில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்