முகநூல் நட்பால் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர் முதல் மனைவியை தாக்கியதால் கைதானார்

முகநூல் நட்பில் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர், முதல் மனைவியை தாக்கியதால் கைதானார்.

Update: 2020-12-29 04:41 GMT
வேதாரண்யம்,

கோவை காந்தி நகர், பீளமேடு பகுதியை சேர்ந்தவர் அனுஷியா(வயது 28). திருமணமான இவர், கணவரை விவாகரத்து செய்து விட்டார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடக்கு தெரு எம்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் மாரிசெல்வம்(25). இவர் கோவை காந்தி நகர், பீளமேடு பகுதியில் வசித்து வந்தார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

முகநூல் நட்பால் திருமணம்

இந்த நிலையில் முகநூல்(பேஸ்புக்)் மூலம் அனுஷியாவிற்கும், மாரிசெல்வத்திற்கும் நட்பு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக தொடங்கிய இந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அனுஷியா கடன் பெற்று தனது கணவர் மாரிசெல்வத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார்.

மற்றொரு பெண்ணுடன் நட்பு

இந்த நிலையில் மாரிசெல்வத்திற்கு நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுமுகக்கட்டளை பகுதியை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது மாரிசெல்வம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மாலதியுடன்(30) பழகி வந்து உள்ளார்.

மாலதியை பார்ப்பதற்காக மாரிசெல்வம் தனது மனைவி அனுஷியாவிடம் ஒரு பொய்யை சொல்லி உள்ளார். அதாவது தனது தாயார் நகையை தனது பெயரில் அடகு வைத்து உள்ளதாகவும், அந்த நகையை தனது தாயாரிடம் திருப்பி கொடுத்து விட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.

2-வது திருமணம்

இதனை உண்மை என்று நம்பிய அனுஷியா அவரை ஊருக்கு சென்று விட்டு விரைவில் திரும்பி வந்து விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து மாரிசெல்வம், அனுஷியா வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிவகாசி செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு கோவையில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார்.

ஆனால் மாரிசெல்வம் சிவகாசிக்கு செல்லவில்லை. மாறாக முகநூல் மூலம் காதலித்த மாலதிைய பார்ப்பதற்காக வேதாரண்யம் ஆறுமுகக்கட்டளைக்கு வந்துள்ளார். அங்கு மாலதியை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வேதாரண்யம் பகுதியிலேயே தங்கி விட்டார்.

தாக்கினார்

ஊருக்கு சென்ற தனது கணவர் திரும்பி வராததால் அனுஷியா தனது செல்போனில் வாட்ஸ்-ஆப்பில் பார்த்துள்ளார். அப்போது தனது கணவரின் வாட்ஸ்-ஆப் முகப்பு படத்தில்(புரொபைல் பிக்சர்) தனது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் விசாரணை செய்தபோது தனது கணவருக்கும், மாலதிக்கும் திருமணம் நடந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அனுஷியா தனது பெற்றோருடன் வேதாரண்யத்திற்கு உடனடியாக புறப்பட்டு வந்தார். அங்கு வந்த அவர் தனது கணவர் மாரிசெல்வம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று மாரிசெல்வத்தை சந்தித்து கேட்டுள்ளார். அதற்கு மாரிசெல்வம், அனுஷியாவையும் அவரது தந்தையையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அனுஷியாவை கீழே தள்ளி கட்டை மற்றும் கம்பியால் தாக்கியுள்ளார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த அனுஷியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அனுஷியா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்ததுடன் அவர் பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மாரிசெல்வத்தை வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்