உடன்குடியில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது

உடன்குடியில் வியாபாரி கடையை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2020-12-30 02:50 GMT
உடன்குடி,

உடன்குடி கீழ பஜாரில் ராஜகோபால் மகன் கிருஷ்ணவேல் (வயது 40) என்பவர் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இந்த இடம் காங்கிரசுக்கு சொந்தமானது என்று சொல்லி காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இது சம்பந்தமாக கிருஷ்ணவேல், தனது கடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடன்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் வெற்றிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், கிறிஸ்தியாநகரம் ஜெபராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையடைப்பு போராட்டம்

இந்த நிலையில் உடன்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரியின் கடையை ஆக்கிரமித்ததை கண்டித்து கடை அடைப்பு நடத்த அனைத்து கடைகளுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்று உடன்குடி மெயின் பஜார் மற்றும் நான்கு பஜார் ரத வீதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் டீ கடைகள், ஸ்வீட் ஸ்டால், மளிகை கடை, ஓட்டல் திறந்திருந்தன.

ஆர்ப்பாட்டம்

உடன்குடி பஜார் சந்திப்பில் வியாபாரிகள் சங்க தலைவர் ரவி தலைமையில் கடை ஆக்கிரமிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் சங்க செயலாளார் வேல்ராஜ், சங்க பொருளாளர் சுந்தர், துணைத்தலைவர் ஷேக்முகமது, துணைச் செயலாளர் ராஜா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்னமந்திரம், அப்துல் காதர் உட்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் நேரில் விசாரணை நடத்தினர். குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் நேற்று உடன்குடி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்