மாநில தலைவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 190 பேர் கைது

இந்து முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர், பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 190 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-30 06:28 GMT
திருப்பூர்,

திண்டுக்கல் பக்தகிரிமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெறுவது. வழக்கம். இந்த மாதம் பவுர்ணமி கிரி வலத்திற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். ஆனால் தடையை மீறி மலைக்கோட்டையில் தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று இரவு 8 மணி அளவில் இந்து முன்னணி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை தெற்கு போலீசார் கைது செய்து கோட்டை மாரியம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே போல் உஷா தியேட்டர் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் வீரபாண்டி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்

அதே போல் பல்லடம் நால் ரோட்டில் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் கவியரசு தலைமையில் லோகேஷ், ஹரிஹரன், நரேன், உள்ளிட்ட 40 இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் அவர்கள் 40 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் பல்லடம் நால்ரோடு பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்