பெரம்பலூர் மாவட்ட சிவன் கோவில்களில் திருவாதிரை விழாவையொட்டி ஆருத்ரா தரிசனம்

பெரம்பலூர் மாவட்ட சிவன் கோவில்களில் திருவாதிரை விழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

Update: 2020-12-30 23:21 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் திருவாதிரை விழாவையொட்டி நேற்று ஆருத்ரா தரிசன உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 38-வது ஆண்டு திருவாதிரை விழா சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 2 நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

நேற்று காலை நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அபிஷேக, ஆராதனைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சோழிய வேளாளர் சங்க பொறுப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 2 நாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு முதல் நாள் சோமஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று காலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் ஆருத்ரா தரிசன உற்சவ பூஜையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சிவகாம சுந்தரி உடனுறை நடராஜபெருமானுக்கு பால், பழம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர் தங்கவேல் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

திருவாதிரை விழா

மேலும் செட்டிகுளத்தில் உள்ள குபேர தலமான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேசுவரர் கோவில், வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறை குற்றம்பொறுத்த ஈஸ்வரர் (அபராதரட்சகர்) கோவில், துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் உடனுறை மீனாட்சி கோவில், எசனையில் உள்ள ஞானாம்பிகை சமேத காலத்தீஸ்வரர் கோவில், அம்மாபாளையம் அருணாசலேஸ்வரர் கோவில், நக்கசேலம் துவாரகாபுரீஸ்வரர் கோவில், வி.களத்தூர் விஸ்வநாதசுவாமி கோவில், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், வேப்பூர் அருணாசலேஸ்வரர் கோவில், திருவாலந்துறை சோழீஸ்வரர் கோவில், தொண்டமாந்துறை காசிவிஸ்வநாதர் கோவில், வெங்கலம் தாராபுரீஸ்வரர் கோவில் உள்பட பெரும்பாலான சிவன் கோவில்களில் திருவாதிரை விழா விமரிசையாக நடந்தது.

மேலும் செய்திகள்