விழுப்புரம், மேல்மலையனூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் மேல்மலையனூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-12-31 04:08 GMT
விழுப்புரம்,

தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரிய நட்சத்திரமாகும். அந்த நாள் சிவபெருமான் நடராஜராக ஆனந்த நடனம் புரியும் நன்னாளாகும். அந்நாளில் நடராஜர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது மூலவராகிய நடராஜ மூர்த்தியே உற்சவராக புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன விழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கோவிலில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு காலை 7 மணியளவில் பால், தயிர், பன்னீர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம்

அதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் தோளில் உற்சவரை சுமந்தபடி நடனமாடிக்கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். பின்னர் மாலையிலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

மயிலம்

மயிலம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளிதெய்வானை முருகன், மற்றும் நடராஜபெருமான், சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானை முருகன். சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். தொடர்ந்து மலைவள காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடராஜருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்