2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்: வேலூர் சட்ட கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் - கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்

வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேலூர் சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தா

Update: 2020-12-31 13:12 GMT
காட்பாடி,

வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேலூர் சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் வைப்பறை, வாக்கு எண்ணும் வளாகம், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

காட்பாடி காந்திநகரில் 1995-ம் ஆண்டு முதல் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனை கலெக்டர் ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பொன்னை ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள பாலம் கடந்த மாதம் நிவர் புயலின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் 36 தூண்களில் 4 தூண்கள் லேசாகவும், 14-வது தூண் பலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் தூண்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடித்து பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி, துணை கலெக்டர் காமராஜ், மாவட்ட நூலக அலுவலர் பழனி, காட்பாடி தாசில்தார் பாலமுருகன், நெடுஞ்சாலை துறை திறன்மிகு உதவியாளர் நளினி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்