காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

Update: 2021-01-01 04:58 GMT
கன்னியாகுமரி,

பாரா விளையாட்டை ஊக்குவிக்கவும், நாட்டில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை வெளிகொண்டுவரவும், மாற்றுதிறனாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் முதல் பாரா சைக்கிள் ஓட்டும் ஆதித்யா மேத்தா தலைமையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பயணம் நடந்தது.

கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி ஸ்ரீநகர் தால் ஏரிகரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் தொடங்கியது. இதை ஆதித்யாமேத்தா பவுண்டேஷன் இயக்குனர் இந்திராபெனுபுலு தலைமையில் எல்லைபாதுகாப்பு படை உயர் அதிகாரி ஸ்ரீராகேஷ் அஸ்தானா தொடங்கிவைத்தார்.

கன்னியாகுமரியில் நிறைவு

இந்த சைக்கிள் பயணம் டெல்லி, மதுரா, நாக்பூர், ஐதராபாத், தர்மபுரி, மதுரை, நெல்லை வழியாக 3 ஆயிரத்து 842 கி.மீ. தூரத்தை கடந்து நேற்று கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. விவேகானந்த கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடந்த சைக்கிள் பயண நிறைவு விழா நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரி பேபிஜோசப் தலைமை வகித்தார். கமாண்டன்ட்கள் அஜித்குமார், மேத்யூ வர்க்கீஸ், ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் சைக்கிள் குழுவின் தலைவர் ஆதித்யாமேத்தா நிருபர்களிடம் கூறியதாவது :-

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சவாலான சூழ்நிலைகளுக்கிடையே 30 பேருடன் சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். இந்த பெருந்தொற்று காலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 30 பேர் கடுமையான சவாலையும் எதிர்கொண்டு இந்த பயணத்தை நிறைவுசெய்தனர். இந்த பயணத்தில் ஊனமுற்றவர்களும் இடம்பெற்று சாதனைபடைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்