குமரியில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதம்

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதமடைந்தது.

Update: 2021-01-01 05:07 GMT
குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தினால் கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளை கடல் நீர் சூழ்வது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாத்து கொள்ள மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குறும்பனையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள சகாய மாதா தெருவில் வீட்டை சுற்றி வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் சரிந்து கடலில் விழுந்தன. இதனால் கடலரிப்பு ஏற்பட்டு ஜெயசீலன் (வயது 40) என்பவரது வீடும், அருகில் உள்ள மற்றொரு வீடும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதேபோல் குமரியில் பல இடங்களில் கடல் சீற்றமாக இருந்தது.

பிரின்ஸ். எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

அதை தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். இது குறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது, கடந்த மே மாதம் குறும்பனையில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியை குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் வந்து பார்வையிட்டு சென்றார். தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாக ஊர் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. ஆனால் 7 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. குறும்பனையில் உடனே கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவேன் என கூறினார்.

மேலும் செய்திகள்