ஜோலார்பேட்டை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை

ஜோலார்பேட்டை அருகே புத்தாண்டு தினத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-02 11:12 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது42). கூலித்தொழிலாளி. கடந்த சனிக்கிழமை மாலை பார்த்திபன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் என்பவர் எதிரே வந்துள்ளார். அப்போது வழி விடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து நடக்க இருந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பார்த்திபன் தனது வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுசக்கரகுப்பம் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். காந்திநகர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத செங்கல் சூளை அருகே சென்றபோது அவரை சிலர் வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு தப்பிக்க முயன்று உள்ளார். ஆனால் அந்த கும்பலை அவரை விரட்டிச்சென்று வெட்டியது. இதில் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பார்த்திபனின் மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்