அமைச்சர்களுக்கு தேவையற்ற பெயர் சூட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

மக்கள் கிராமசபை கூட்டங்களில் அமைச்சர்களுக்கு தேவையற்ற பெயர் சூட்டி பேசி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-01-05 03:19 GMT
திருவாரூர்,

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2 கோடியே 6 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கியது.

திருவாரூர் கீழவீதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.

ரூ.96.51 கோடி

அப்போது அவர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 726 அங்காடிகள் மூலம் 3 லட்சத்து 74 ஆயிரத்து 838 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.96.51 கோடி மதிப்பில் ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என்றார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் மூர்த்தி, நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை தலைவர் கலியபெருமாள், மாங்குடி கூட்டுறவு வங்கி தலைவர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் ரெயில் பாஸ்கர், பாலாஜி, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிவர் மற்றும் புரெவி புயல் மழையினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 இருந்ததை உயர்த்தி ரூ.20 ஆயிரமாக வழங்கிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நிறுத்திக்கொள்ள வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டங்களில் அமைச்சர்களுக்கு தேவையற்ற பெயர் சூட்டி பேசி வருகிறார்.

நான் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன்.. அவரது தந்தை கருணாநிதி திருவாரூரில் இருந்து சென்னைக்கு எவ்வாறு சென்றார் என்பதை கண்ணதாசனே சொல்லி உள்ளார். அதனால் ஓ.சி. ரெயில் கருணாநிதி மகன் என்று மு.க.ஸ்டாலினுக்கு பெயர் வைத்து அழைக்க வேண்டிய நிலை வரும்.

அவரைப்போன்று தகுதியும், சக்தியும் படைத்தவர்கள் நாங்கள். தொடர்ந்து அவர் இவ்வாறு பேசி வந்தால் நாங்களும் அவருக்கு பெயர் சூட்ட நேரிடும். அதில் எங்களுக்கு எந்தவித தயக்கமோ, பயமோ கிடையாது. எனவே அமைச்சர்களுக்கு தேவையற்ற பெயர் சூட்டுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் திருவாரூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.

நன்னிலம்

நன்னிலத்தில் நேற்று ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் கோபால், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் ராம குணசேகரன், திருவாரூர் மொத்த விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் கலியபெருமாள் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள அரசாங்க அலுவலர் கூட்டுறவு பண்டகசாலையில் ரூ.2,500 ெராக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் முன்னிலை வகித்தார். முன்னதாக கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, நகராட்சி ஆணையர் கமலா, முன்னாள் நகராட்சி தலைவர்கள் ராஜமாணிக்கம், சுதா அன்புச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்.வாசுகிராமன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், கூட்டுறவு துணைப்பதிவாளர் ராமசுப்பு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்