பட்டுக்கோட்டையில் பயங்கரம்: தலையை துண்டித்து ரவுடி படுகொலை

பட்டுக்கோட்டையில் தலையை துண்டித்து ரவுடி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2021-01-05 03:53 GMT
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பகுதியில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி(வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில் பிராய்லர் கோழி கறிக்கடை நடத்தி வந்தார். இவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று மாலை அய்யப்பன் கோவில் செல்வதற்கு தேவையான பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

தலையை துண்டித்து கொலை

பெரிய கடைத்தெருவில் அவர் வந்தபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் வந்தனர். அவர்கள், சிரஞ்சீவி மோட்டார் சைக்கிளின் அருகில் வந்ததும் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்து இருந்த பட்டாக்கத்தியால் சிரஞ்சீவியை வெட்டினார். இதில் சிரஞ்சீவியின் தலை துண்டாகி ரோட்டில் விழுந்தது. உடல் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தது. சினிமாவில் வருவதுபோன்று நடந்த இந்த காட்சியை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து சிதறி ஓடினர்.

போலீசார் விசாரணை

இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றியதும் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரும் சாவகாசமாக தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பட்டுக்கோட்டை நகர போலீசார் சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முன்விரோதம் காரணமா?

கொலையுண்ட சிரஞ்சீவி மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உள்ளது. சிரஞ்சீவிக்கும், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கபி என்கிற கபிலனுக்கும் இடையே யார் பெரிய ஆள் என்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இருவருடைய பெயர்களும் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று உள்ளது.

இந்த நிலையில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டு உள்ளதால் இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சிரஞ்சீவியால் பாதிக்கப்பட்ட வேறு யாரேனும் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனரா? இந்த கொலைக்கான பின்னணி என்ன? கொலையாளிகள் யார்? என்று பல்வேறு கோரணங்களில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் மக்கள் நெருக்கடி மிகுந்த பெரிய கடைத்தெருவில், போலீஸ் நிலையம் அருகே ரவுடி ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்