கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை

பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-07 00:53 GMT
பெங்களூரு, 

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.

கர்நாடக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் உள்ள ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் கர்நாடகத்திலும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தட்சிண கன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்ட கலெக்டர்கள், பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. கேரளா எல்லை பகுதியில் உடனே சோதனை சாவடிகளை அமைத்து அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கேரளா எல்லையில் அமைந்துள்ள கர்நாடக பகுதிகளில் இருந்து கோழி உள்ளிட்டவற்றின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பறவைகள் சரணாலயம் மற்றும் நீர் நிலைகளுக்கு வரும் பறவை இனங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோழிகள், வான்கோழிகள், வாத்துகள், பறவைகள், காட்டு பறவைகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் ஏதாவது இயல்புக்கு மாறான முறையில் இறந்தாலோ அவற்றுக்கு நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்தாலோ உடனே அதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்