மும்பை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி வெளிநாட்டுக்காரர்களிடம் பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது

சி.பி.ஐ போலீசார் என கூறி வெளிநாட்டுக்காரர்களிடம் பணம், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-08 02:40 GMT
காரில் கடத்தல்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஈராக் நாட்டை சேர்ந்த 3 பேர் வெளியே வந்தனர். அங்கிருந்த காரில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களை வழிமறித்தனர். இதில் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் அவர்களை தங்களுடன் காரில் ஏற்றி மும்பை-புனே நெடுஞ்சாலை பகுதிக்கு கடத்தி சென்றனர். வழியில் சென்ற போது அவர்களை மிரட்டி செல்போன்கள் மற்றும் 600 டாலர்கள், பாஸ்போர்ட் போன்றவற்றை பறித்து கொண்டனர். காலாப்பூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது வெளிநாட்டு பிரஜைகளான 3 பேரை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி சென்றனர்.

4 பேர் கைது
இந்த சம்பவம் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் ராய்காட் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் உரண் பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். இவரை கைது செய்த போலீசார் விசாரித்தபோது, புனேயில் பதுங்கி இருந்த மேலும் 3 பேரை கைது செய்தனர். கடத்தல் கும்பலில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்