தென்காசியில் பறவைக்காய்ச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2021-01-08 05:28 GMT
கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முகமது காலித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசுகையில், “தற்போது நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே மாநில எல்லையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள், கோழி இறைச்சி, கோழி தீவனங்கள் மற்றும் இறைச்சி கழிவுகள் வாகனங்களில் கொண்டு வந்தால் அந்த வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கோழி 
வளர்ப்பு பண்ணைகளில் அதன் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடை துறை டாக்டர்களுக்கு கூறப்பட்டுள்ளது. கோழிகளுக்கு சளி வடிதல், இருமல், தும்முதல் போன்றவை காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோழி பண்ணைகள் இருக்கும் இடங்களில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்