ஜவ்வாதுமலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படும் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் - கலெக்டர் ஆய்வு

ஜவ்வாதுமலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படும் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-01-08 11:49 GMT
திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி ஜமுனாமரத்தூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் 2019-2020ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் சாமை அரிசி, தேன், கருமிளகு, புளி ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தும் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஜவ்வாதுமலை பழங்குடியின விவசாயிகள் நிறுவன தயாரிப்புகளான சாமை அரிசி, கருமிளகு, தேன், புளி ஆகியவை சந்தைப்படுத்துவதற்கு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

மேலும் கூட்ட அரங்கில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர், இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலக வளாகத்தில் இருந்து மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள உற்பத்தி பொருட்கள் சந்தைப் படுத்தும் விற்பனை வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ஜமுனாமரத்தூரில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட வரும் படகு சவாரி குளம், சிறுவர் பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கூடுதல் வசதிகள் மேற்கொள்வதற்கும், கூடுதல் சுற்றுலா பயணிகள் ஈர்ப்பதற்கும் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் சாமை அரவை உற்பத்தி அலகு, ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் தேன் பதப்படுத்தும் அலகு, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் புளி பிரித்தெடுக்கும் அலகு ஆகிய இடங்களை பார்வையிட்டார். அத்திப்பட்டு பகுதியில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சாமை அரிசி, தேன், புளி ஆகிய உற்பத்தி அலகுகளின் ஒருங்கிணைந்த வளாகம் கட்டுமானப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கோவிலூர் ஊராட்சி, கீமூர் கிராமத்தில் பழங்குடியினர் நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் ஜெயசுதா, ஜவ்வாதுமலை ஒன்றிய ஆணையாளர் பாபு, ஒன்றிய தலைவர் ஜீவாமூர்த்தி, கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்