வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை- மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-01-08 14:38 GMT
மதுரை,

மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 32) . இவருக்கும் கோமதி என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டு உள்ளது. திருமணத்தின்போது பேசிய வரதட்சணையை பெண் வீட்டாரால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. இதனால் பாக்கி வரதட்சணையை கேட்டு ஞானவேல் மற்றும் குடும்பத்தினர் கோமதியை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கம் ஆஜரானார்.
விசாரணை முடிவில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதன் காரணமாக கோமதியை தற்கொலைக்கு தூண்டியது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே ஞானவேலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி கிருபாகரன்மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்