மும்பையில் ஓடும் டாக்சிகளில் 3 வண்ண இன்டிகேட்டர் பொருத்த மேலும் 6 மாதம் அவகாசம்

மும்பையில் ஓடும் டாக்சிகளில் 3 வண்ண இன்டிகேட்டர் பொருத்த மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-01-08 22:45 GMT
மும்பை,

மும்பையில் 40 ஆயிரத்திற்கு மேல் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் குறிப்பிட்ட இடங்களுக்கு சவாரி வர மறுக்கும் டாக்சி டிரைவர்களால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கருப்பு மஞ்சள் மற்றும் சில்வர்-ஊதா நிற டாக்சிகளின் மேற்கூரைகளில் 3 வண்ண இன்டிகேட்டர்களை பொருத்த மாநில அரசு முடிவு செய்தது.

இதன்படி டாக்சிகளின் மேற்கூரைகளில் சிவப்பு, பச்சை, வெள்ளை ஆகிய 3 வண்ண இன்டிகேட்டரை பொருத்த வேண்டும்.

இதில் சிவப்பு விளக்கு எரிந்தால் டாக்சியில் ஏற்கனவே பயணிகள் உள்ளனர் என அர்த்தம். பச்சை நிற விளக்கு எரிந்தால், டாக்சியில் யாருமில்லை பயணிகள் சவாரிக்காக அந்த டாக்சியை அழைக்கலாம். இதேபோல டிரைவர் சவாரிக்கு செல்ல முடியாத நிலையில் வெள்ளை நிற விளக்கை எரியவிடலாம். இதன் மூலம் பயணிகள் தேவையில்லாமல் சாலையில் செல்லும் அனைத்து டாக்சிகளையும் நிறுத்தி சவாரிக்கு அழைக்க வேண்டிய தேவை இருக்காது.

இந்த இண்டிகேட்டர்களை பொருத்த டாக்சி டிரைவர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி வரை அரசு கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்தநிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக டாக்சிகளுக்கு தேவையான 3 வண்ண இண்டிகேட்டர்கள் போதிய அளவில் தயாரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே டாக்சிகளில் புதிய இன்டிகேட்டர்களை பொருத்த வழங்கப்பட்ட காலஅவகாசத்தை மாநில அரசு ஜூலை 1-ந் தேதி வரை நீட்டித்து உள்ளது.

மேலும் செய்திகள்